செவ்வாய், 23 மே, 2023

படல் (14) நட்புக் கோள், பகைக்கோள் !

 

சூரிய            தேவனின்        நட்புக்           கோள்கள்

சுதமதி           செவ்வாய்        குருவென்        பார் !

சூழும்           பகையோ        சுக்கிரன்          சனியுடன்

சுருட்டை        ராகு             கேதென்         பார் ! 

 

நேரிய           மதியின்         நட்புக்           கோள்கள்

நித்திய          உதயன்,          புதனென்         பார் !

நிலவின்         பகைமைக்       கோள்கள்        ராகு

நீசகப்            பாம்பு            கேதென்         பார் !

 

செவ்வாய்        அழலோன்       நட்புக்           கோள்கள்

செங்கதிர்        அம்புலி          குருவென்        பார் !

சேந்தன்          பகைமைக்       கோள்கள்        புதனும்

சீறும்            ராகும்           கேதென்         பார் !

 

நவ்விய         புதனின்          நட்புக்           கோள்கள்

நன்மணி         சுக்கிரன்,         கனலி, என்       பார் !

நகுமதி          மட்டும்          புதனின்          பகையாம்

நவகோள்        வானின்          விதியென்        பார் !

 

ஆச்சான்         குலகுரு          தோழமைக்      கோள்கள்

ஆதவன்,         மதி,செவ்         வாய் என்        பார் !

ஆகாக்           கோள்கள்        வெள்ளியும்      புதனும்   

அலையும்        வானியல்        விதியென்        பார் !

 

சுக்கிர           பார்கவன்        தோழமைக்      கோள்கள்

சூழ்புதன்         பாம்புகள்         சனியென்        பார் !

சுடரும்,          நிலவும்,          பளிங்கின்        பகையாம்

சூழ்பியல்        இயக்கும்         விதியென்        பார் !

 

மைமுகன்       சனியின்         தோழமைக்      கோள்கள்

சுக்கிர,           பாம்புகள்,        புதனென்         பார் !

மந்தன்          அணுகா          மாதவச்         சூரியன்,

மதி,குசன்        சனியின்         பகையென்       பார் !

 

கைம்பணி       இணையின்      தோழமைக்      கோள்கள்

கலியன்          வெள்ளி,         சனியென்        பார் !

கதிரவன்         நிலவு,           செவ்வாய்        மூவரும்

கட்செவி         தமக்குப்         பகையென்       பார் !

------------------------------------------------------------------------------------------------

சுதமதி = குளிர்நிலவு

சுருட்டை = பாம்பு

நித்திய உதயன் = சூரியன்

செங்கதிர் = சூரியன்

சேந்தன்  = சிவப்பு நிறமுள்ளவன்

நவ்விய  = அழகு

கனலி   = சூரியன்

நகுமதி   = நகரும் மதி

ஆச்சான் = ஆச்சாரியன்

பார்கவன்  = சுக்கிரன்

சுடர்  = சூரியன்

பளிங்கு  = சுக்கிரன்

மைமுகன்  = கரிய நிறத்தான்

மந்தன்  = சனி

---------------------------------------------------------------------------------------------

 

நட்புக்கோள்              கிரகம்            பகைக்கோள்

சந் செவ், குரு     -     சூரியன்      -     சுக், சனி, ராகு, கேது

சூரி, புதன்                    -     சந்திரன்       -     ராகு, கேது

சூரி, சந், குரு               -     செவ்வாய்    -     புத, ராகு, கேது

சூரி, சுக்                          -     புதன்              -     சந்.

சூரி, சந், செவ்.            -     குரு                   -    புத, சுக்

புத, சனி, ராகு, கேது -    சுக்கிரன்      -     சூரி, சந்.

புத, சுக், ராகு, கேது    -    சனி                -     சூரி, சந், செவ்

சனி, சுக்                           -     ராகு               -     சூரி, சந், செவ்

சனி, சுக்                           -     கேது              -     சூரி, சந், செவ்.

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]

{23-05-2023}

-----------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக