செவ்வாய், 27 டிசம்பர், 2022

பாடல் (05) கோள்களின் ஆட்சி வீடுகள் !

கோள்களின்    ஆட்சிப்    பாவகம்    சொல்வேன்

               கோபெருந்    தேவீ !    குறைதீர்த்   தருள்வாய் !

ஒள்ளொளி    சூரியன்    உறுமனை    சிம்மம்

                ஊர்மதி    ஆட்சி    ஊன்றகம்    கடகம் !

செவ்வாய்    ஆளுகைச்    சீரிடம்    மேடம்,

                 செந்தேள்    மனையும்    செவ்வாய்   மனையே !

நவ்விய    புதனகம்    மிதுனம்     கன்னி,

                  நலந்தரு    குருவகம்    தனுசம்    மீனம் !

வெள்ளியின்    வீடோ    விடையும்    துலையும்,

                   விழுமிய    சனியகம்    மகரமும்   குடமும் !

கோளரி     ராகு     கன்னியில்     ஆட்சி,

                    குறும்பணி    கேதின்    குடைநிழல்    மீனே !

----------------------------------------------------------------------------------------

பாவகம்  = இராசி வீடு

உறுமனை  = சொந்த வீடு

ஊர்மதி  =  உலாவரும் சந்திரன்

ஊன்றகம்  = ஆட்சி வீடு

ஆளுகைச் சீரிடம்  = ஆட்சி வீடு

செந்தேள்  = விருச்சிகம்

நவ்விய  = நன்மை செய்யும்

வெள்ளி  = சுக்கிரன்

விடை  = ரிஷபம்

விழுமிய  = மேன்மையான

குடம் = கும்பம்

அரி  = பாம்பு

குறும்பணி  = குட்டையான பாம்பு

குடைநிழல்  = ஆட்சி வீடு

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 12]

{27-12-2022}

---------------------------------------------------------------------------------------


திங்கள், 26 டிசம்பர், 2022

பாடல் (04) இராசிகளில் கோள்கள் நிற்கும் காலம் !

 

ஒவ்வொரு     கோளும்     ஒவ்வொரு     ராசியை

         ஒவ்வொரு    கதியில்    கடக்கிறது !

எவ்வித      மாயினும்      எப்பொழு     தாயினும்

         எல்லாம்      நியதியில்     நடக்கிறது !

சந்திர       கோளம்       தனியொரு      ராசியில்

         சஞ்சரி        நாள்கள்       இரண்டேகால் !

வேந்தன்       பரிதி       விட்புதன்       வெள்ளி

          விரைவுக்      காலம்       ஒருதிங்கள் !

உதிரன்       செவ்வாய்      உழிஞைக்      காலம்

           ஒன்றரை       மாதம்       உணர்வாயே !

கதிக்கும்      குலகுரு       கடக்கும்        காலம்

     கச்சித       மாய்ஓர்       ஆண்டம்மா !

இராகும்       கேதும்        இயங்கும்        காலம்

     எதிர்வழி      ஒன்றரை      ஆண்டல்லோ !    

பிராணக்       கணிதன்       சனியின்        இயக்கம்

     பெருமம்       இரண்டரை       ஆண்டறிவாய் !  

----------------------------------------------------------------------------------------

கோளும் = கிரகமும்

விரைவில் = வேகத்தில்

நியதியில் = குறிப்பிட்ட ஒழுங்கில்

வேந்தன் பரிதி  = கிரகங்களுக்கெல்லாம் தலைவனான சூரியன்

விட்புதன்  = விண்ணில் உலா வரும் புதன்

உதிரன்  = இரத்தத்தின் காரகனாகிய செவ்வாய்

உழிஞைக் காலம்  = இயங்கும் காலம்

கதிக்கும்  = விண்ணில் இயங்கும்

எதிர்வழி  = எதிர்த் திசையில்

பிராணக் கணிதன்  = ஆயுள் காரகனாகிய

பெருமம்  = மற்ற கோள்களை விட அதிக காலம்

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 11]

{26-12-2022}

---------------------------------------------------------------------------------------

பாடல் (03) விண்மீன்களும் உரிய இராசியும் !

 

அசுவதி      பரணி      கார்த்திகை      முன்கால்

     அத்துணை     மீன்களும்     அசராசி !

பசுபதி      மைந்தன்     கார்த்திகைச்     செல்வன்

     பகுமீன்        முக்கால்       விடைராசி !

விசும்புறு     ரோகிணி      சீரிடம்      முன்னரை

     விளம்பும்      விடையின்      பெயர்ராசி !

முசுடச்       சீரிடம்       பின்னரை    ஆதிரை

     முக்கால்      புனர்வசு        மிதுனலோ !

கடைக்கால்     புனர்வசு     பூசமா     யிலியம்

     கடகம்        என்பதை       அறிவாயோ !

விடைநுக      மகமும்     பூரமும்    உத்திரம்

     விளம்பும்      முன்கால்      சிம்மமதே!    

குடைவிரி      வடபுல      உத்திர     மீனின்

     கடைமுக்      கால்கள்       கன்னியடி !

முடையாக்     கரமெனும்     அத்தம்    சித்திரை

     முன்னரை    யாவும்     கன்னியடி !

சித்திரை       பின்னரை      சுவாதி      விசாகம்

     செவ்விய     முக்கால்     துலைராசி !

அத்தன்        விசாகம்        நாலாம்     காலுடன்

     அனுசம்       கேட்டை       விருச்சிகமே !

முத்தம்        மூலபூ         ராடவுத்       திராடம்

     முன்கால்      தனுசு         சிலைராசி !

உத்திரா        க்கால்         ஒழிபுடன்     ஓணம்

     அவிட்டம்      முன்னரை      மகரமடி !

அவிட்டம்      பின்னரை      சதயம்         பூரட்

     டாதியின்       ஒழிபும்        கும்பமடி !         

தெவிட்டாத்     தேனே !      கேளடி         உத்திரட்

     டாதியின்      இடமோ        மீனமடி !

தவிட்டில்        உறங்கும்     மணியென     ரேவதி

     தங்கல்        மீனெனும்       வீடல்லோ !

புவியிடை      சோதிடக்      கலையறி    பெண்ணே !

     புலமகள்      நீயும்      போதருவாய் !

-----------------------------------------------------------------------------------

ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் என்பது சோதிடக் கலை வகுத்துள்ள நியதி ! பாதம் = கால்.

-----------------------------------------------------------------------------------

முன்கால்  = முதலாவது பாதம்

அசராசி  = ( அசம்=ஆடு ) மேழ ராசி

பசுபதி மைந்தன்  = சிவன் மகன் முருகன்

கார்த்திகைச் செல்வன்  = முருகன் பெயரால் வழங்கும் கார்த்திகை நட்சத்திரம்

பகுமீன்  = நான்காகப் பகுத்த நட்சத்திரம்

முக்கால் = முதல் மூன்று பாதங்கள்

விடை ராசி  = ரிஷப ரசி

விசும்புறு  = வானில் விளங்கும்

முன்னரை  = முன்னிரு பாதங்கள்

முசுடம்  = கீழமை தன்மை

பின்னரை  = பின்னிரு பாதங்கள்

கடைக்கால்  = கடைசிப் பாதம்

விடைநுகம்  = நுகத்தடி போன்ற

குடைவிரி வடபுலம்  = ஆகாயக் குடையின் வட திசையில்

கடைமுக் கால்கள்  = கடைசி மூன்று பாதங்கள்

முடையாக் கரம் = கைவிரல்கள் போன்ற

துலை ராசி  = துலாம் ராசி

அத்தன்  = உயர்குணமுடைய

முத்தம்  = முத்து போன்ற

சிலை = வில் (தனுசு)

ஒழிபு  = எஞ்சியவை

தவிட்டில் உறங்கும்  = தவிட்டில் கலந்தாலும் தனியாகத் தெரியும்

புலமகள் = புலமை உள்ளவள்

போதருவாய்  = செய்தி அறிவாயாக !

 --------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 11]

{26-12-2022}

-----------------------------------------------------------------------------------------