செவ்வாய், 23 மே, 2023

பாடல் (18) தசாநாதன் ஆட்சிக் காலம்!

 

கிருத்திகை       உதிரம்            உதிராடம்

கிரணன்          கதிரவன்          ஆறாட்டை !

உருகிணி         அத்தம்            திருவோணம்

உடுமதி           சந்திரன்          பஃதாட்டை !

மிருகம்           சித்திரை          மேலவிட்டம்

மிரட்டும்          செவ்வாய்        ஆண்டேழு !

திருவுடு           ஆதிரை           சுவாதிசதை

திறம்பும்          ராகுலன்          பதினெட்டு !

புனரும்           விசாகம்          பூரட்டம்

பூரணன்          குருபரன்          ஈரெட்டு !

அனுடம்          பூசம்              உதிராதி

அலசன்           காரியன்          பஃதொன்பான் !

கேட்டை          ரேவதி            ஆயிலியம்

கீதன்             புதனெறி          பஃதேழு !

கோட்டை        அசுவினி          மகமூலம்

கோன்மை        கேதேழ்           ஆண்டலவோ !

பரணிமீன்        பூரம்              பூராடம்

பளிங்கன்         இருபஃ            தாண்டலவோ !

தரணியில்        வாழும்           தமனியரே !

தசைநிலை       தவறா            துணர்வீரே !

 ------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்

உதிரம் = உத்திரம்

உதிராடம்  = உத்திராடம்

ஆறாட்டை = ஆறு ஆண்டுகள்

உருகிணி = ரோகிணி

அத்தம் = அஸ்தம்

பஃதாட்டை = பத்து ஆண்டுகள்

மிருகம் = மிருகசீரிடம்

ஆதிரை   =திருவாதிரை

சுவதி  = சுவாதி

சதை  = சதயம்

ராகுலன்  = இராகு

புனரும் = புனர்பூசம்

பூரட்டம் = பூரட்டாதி

குருபரன் = குரு

உதிராதி  = உத்திரட்டாதி

காரியன்  = சனி

ப்ஃதொன்பான்  = பத்தொன்பது ஆண்டுகள்

ப்ஃதேழு = பதினேழு ஆண்டுகள்

கேதேழ்  = கேதுவுக்கு ஏழு ஆண்டுகள்

பளிங்கன்  = சுக்கிரன்

இருபஃது  = இருபது ஆண்டுகள்

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]

{23-05-2023}

-----------------------------------------------------------------------------------

பாடல் (17) கோள்களின் தசாகாலம் !

 

 

ஏழ்கேது,         வெள்ளி          இருபஃது ,       ஆறுகதிர்,

ஊழ்மதிக்(கு)     ஒருபஃது ,        ஊர்குசனுக்கேழ்,சூழ்ராகு

ஈரொன்பான்,     ஆசான்          ஈரெட்டு,         பஃதொன்பான்

காரியவன்,       பஃதேழ்          புதன் !

----------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்                  

ஏழ்கேது  = கேதுவுக்கு ஏழு ஆண்டுகள்

வெள்ளி இருப்ஃது  = சுக்கிரனுக்கு இருபது ஆண்டுகள்

ஆறுகதிர் = சூரியனுக்கு ஆறு ஆண்டுகள்

ஊழ்மதிக்கு ஓர்பஃது   = சந்திரனுக்கு பத்து ஆண்டுகள்

ஊர்குசன் ஏழ்   = செவ்வாய்க்கு ஏழு ஆண்டுகள்

சூழ்ராகு ஈரொன்பான்   = இராகுவுக்கு 18 ஆண்டுகள்

ஆசான் இரு எட்டு   = குருவுக்கு 16 ஆண்டுகள்

பஃதொன்பன் காரியவன்   = சனிக்கு 19 ஆண்டுகள்

பஃதேழ் புதன்   = புதனுக்கு 17 ஆண்டுகள்

=====================================================

 

                         தசைகள் வரிசை முறை நினைவு வாக்கியம்

(1)  கேரளாவைச் சுற்றிப்பார்க்க பானு மதி செவ்வாய் ரவுகுழந்தை ரவணனுடன் புறப்பட்டாள் !

    ----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]

{23-05-2023}

-----------------------------------------------------------------------------------

பாடல் (16) கோள்களின் காரகப்பலன்!

 

                       சூரியன்

 

தந்தை,          தலைநோவு,     தைரியம்,        மேனியெழில்,

சிந்தை          தெளிவில்லாப்   பெண்போகம் --  முந்துபுகழ்

விந்தை,         விரைத்தமுடி,    உத்யோகம்,      காரகனே

செந்தேர்         பரிதியெனச்     செப்பு !

 

                      சந்திரன்

 

அன்னை,        அணிமணிகள்,   நல்லுறக்கம்,     இன்புசிவு,

இன்னல்         உடல்மெலிவு,   என்புருக்கி   ---  உன்மத்தம்

மன்னல்         பணிவாய்ப்பு,    மல்லாட்டம்     யாவுக்கும்

கன்மதியே       காரகனாம்       காண் !

 

                      செவ்வாய்

 

உடன்பிறப்பு,     பூமி,அழல்,       உற்சாகம்,        கடுங்கோபம்,

கடன்,தடைகள்,  காயமுறல்,      அதிகாரம்    --   படைச்சேவை,

அடல்வீரம்,      செங்குருதி,      போர்,சோரம்,    விரைமரணம்,

கடவுகுசன்      காரணமாம்      காண் !

 

                        புதன்

 

கல்விநிலை,     பேரறிவு,        கற்சிற்பம்,       தாய்மாமன்,

சொல்லாடல்,    வாதநோய்,      சொற்பொழிவு  -- நல்லியல்பு,

வெல்லரிய      வாணிபமும்     சங்கீதம்,         சோதிடமும்

எல்புதனே       காரணமாம்      ஈங்கு !

 

                        குரு

 

பிள்ளைகள்,     நல்லொழுக்கம்,  பெரும்பதவி,     இல்லவளம்,

வெள்ளைக்      குருத்துவம்,     விற்பன்னம், --   உள்அமைதி,

தெள்ளியம்,      யோகநிலை,     திறப்படல்,       அரசுறவு,

ஒள்ளிகுரு       காரணமென்     றோது !

 

                       சுக்கிரன்

 

இல்லாள்,       துணையமைவு, எண்ணற்ற       பெண்தொடர்பு,

நல்லழ்கு,       இசைக்கருவி,    நாட்டமுடன்  -- பல்நடனம்,

சொல்லில்       விகடமொழி,     சூழ்கடல்        வான்செலவு,

எல்லாமே       சுக்கிரனின்      ஈவு !

 

                         சனி

 

தீர்க்காயுள்,      சீவனம்,         தண்டனை,      வாயாடல்,

ஈர்க்கும்         மதுமோகம்,     வீண்பேச்சி   --  ஏர்ப்புரவு,

ஆர்க்கும்        சிறைவாழ்வு,    அங்கம்          குறையுடைமை,

காரியனே       காரணமாம்      காண் !

 

                         இராகு

 

தந்தை          வழித்தாதை,     தாழ்தொழில்,    பலவேடம்

விந்தை         விகடவினை,    ஊனவுடல்   --   தொந்தரவு,

நிந்தை,          சிறைவாசம்,     குட்டம்,          நஞ்சுபயம்,

குந்தகன்         இராகுவெனக்    கூறு !

 

                        கேது

 

தாய்வழித்       தாதை,          விலைமகளிர்,   தீயூறு,

நோய்மலிவு,     குட்டம்,         அகங்காரம்,   --  மாய்மாலம்,

வாய்வயிறு      குத்தல்,          சிலந்தி,          சிறைபுக்கல்

காய்கேது        காரணமாம்      காண் !

 

                       காரகன்

 

சூரியன்                               பித்ரு காரகன்       (தந்தை)

சந்திரன்                              மாத்ரு காரகன்       (தாய்)

செவ்வாய்                            பிராத்ரு காரகன்      (சகோதரம்)

புதன்                                  மாதுல காரகன்      (மாமன்) 

குரு                                   புத்ர காரகன்          (புத்திரன்)

சுக்கிரன்                              களத்ர காரகன்        (வாழ்விணை)

சனி                                   ஆயுள் காரகன்        (வாழ்நாள்)

இராகு                                 பிதாமக காரகன்     (அப்பப்பா)

கேது                                   மாதாமக காரகன்    (அம்மப்பா)

 -----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]

{23-05-2023}

-----------------------------------------------------------------------------------