திங்கள், 26 டிசம்பர், 2022

பாடல் (03) விண்மீன்களும் உரிய இராசியும் !

 

அசுவதி      பரணி      கார்த்திகை      முன்கால்

     அத்துணை     மீன்களும்     அசராசி !

பசுபதி      மைந்தன்     கார்த்திகைச்     செல்வன்

     பகுமீன்        முக்கால்       விடைராசி !

விசும்புறு     ரோகிணி      சீரிடம்      முன்னரை

     விளம்பும்      விடையின்      பெயர்ராசி !

முசுடச்       சீரிடம்       பின்னரை    ஆதிரை

     முக்கால்      புனர்வசு        மிதுனலோ !

கடைக்கால்     புனர்வசு     பூசமா     யிலியம்

     கடகம்        என்பதை       அறிவாயோ !

விடைநுக      மகமும்     பூரமும்    உத்திரம்

     விளம்பும்      முன்கால்      சிம்மமதே!    

குடைவிரி      வடபுல      உத்திர     மீனின்

     கடைமுக்      கால்கள்       கன்னியடி !

முடையாக்     கரமெனும்     அத்தம்    சித்திரை

     முன்னரை    யாவும்     கன்னியடி !

சித்திரை       பின்னரை      சுவாதி      விசாகம்

     செவ்விய     முக்கால்     துலைராசி !

அத்தன்        விசாகம்        நாலாம்     காலுடன்

     அனுசம்       கேட்டை       விருச்சிகமே !

முத்தம்        மூலபூ         ராடவுத்       திராடம்

     முன்கால்      தனுசு         சிலைராசி !

உத்திரா        க்கால்         ஒழிபுடன்     ஓணம்

     அவிட்டம்      முன்னரை      மகரமடி !

அவிட்டம்      பின்னரை      சதயம்         பூரட்

     டாதியின்       ஒழிபும்        கும்பமடி !         

தெவிட்டாத்     தேனே !      கேளடி         உத்திரட்

     டாதியின்      இடமோ        மீனமடி !

தவிட்டில்        உறங்கும்     மணியென     ரேவதி

     தங்கல்        மீனெனும்       வீடல்லோ !

புவியிடை      சோதிடக்      கலையறி    பெண்ணே !

     புலமகள்      நீயும்      போதருவாய் !

-----------------------------------------------------------------------------------

ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் என்பது சோதிடக் கலை வகுத்துள்ள நியதி ! பாதம் = கால்.

-----------------------------------------------------------------------------------

முன்கால்  = முதலாவது பாதம்

அசராசி  = ( அசம்=ஆடு ) மேழ ராசி

பசுபதி மைந்தன்  = சிவன் மகன் முருகன்

கார்த்திகைச் செல்வன்  = முருகன் பெயரால் வழங்கும் கார்த்திகை நட்சத்திரம்

பகுமீன்  = நான்காகப் பகுத்த நட்சத்திரம்

முக்கால் = முதல் மூன்று பாதங்கள்

விடை ராசி  = ரிஷப ரசி

விசும்புறு  = வானில் விளங்கும்

முன்னரை  = முன்னிரு பாதங்கள்

முசுடம்  = கீழமை தன்மை

பின்னரை  = பின்னிரு பாதங்கள்

கடைக்கால்  = கடைசிப் பாதம்

விடைநுகம்  = நுகத்தடி போன்ற

குடைவிரி வடபுலம்  = ஆகாயக் குடையின் வட திசையில்

கடைமுக் கால்கள்  = கடைசி மூன்று பாதங்கள்

முடையாக் கரம் = கைவிரல்கள் போன்ற

துலை ராசி  = துலாம் ராசி

அத்தன்  = உயர்குணமுடைய

முத்தம்  = முத்து போன்ற

சிலை = வில் (தனுசு)

ஒழிபு  = எஞ்சியவை

தவிட்டில் உறங்கும்  = தவிட்டில் கலந்தாலும் தனியாகத் தெரியும்

புலமகள் = புலமை உள்ளவள்

போதருவாய்  = செய்தி அறிவாயாக !

 --------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 11]

{26-12-2022}

-----------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக