திங்கள், 26 டிசம்பர், 2022

பாடல் (04) இராசிகளில் கோள்கள் நிற்கும் காலம் !

 

ஒவ்வொரு     கோளும்     ஒவ்வொரு     ராசியை

         ஒவ்வொரு    கதியில்    கடக்கிறது !

எவ்வித      மாயினும்      எப்பொழு     தாயினும்

         எல்லாம்      நியதியில்     நடக்கிறது !

சந்திர       கோளம்       தனியொரு      ராசியில்

         சஞ்சரி        நாள்கள்       இரண்டேகால் !

வேந்தன்       பரிதி       விட்புதன்       வெள்ளி

          விரைவுக்      காலம்       ஒருதிங்கள் !

உதிரன்       செவ்வாய்      உழிஞைக்      காலம்

           ஒன்றரை       மாதம்       உணர்வாயே !

கதிக்கும்      குலகுரு       கடக்கும்        காலம்

     கச்சித       மாய்ஓர்       ஆண்டம்மா !

இராகும்       கேதும்        இயங்கும்        காலம்

     எதிர்வழி      ஒன்றரை      ஆண்டல்லோ !    

பிராணக்       கணிதன்       சனியின்        இயக்கம்

     பெருமம்       இரண்டரை       ஆண்டறிவாய் !  

----------------------------------------------------------------------------------------

கோளும் = கிரகமும்

விரைவில் = வேகத்தில்

நியதியில் = குறிப்பிட்ட ஒழுங்கில்

வேந்தன் பரிதி  = கிரகங்களுக்கெல்லாம் தலைவனான சூரியன்

விட்புதன்  = விண்ணில் உலா வரும் புதன்

உதிரன்  = இரத்தத்தின் காரகனாகிய செவ்வாய்

உழிஞைக் காலம்  = இயங்கும் காலம்

கதிக்கும்  = விண்ணில் இயங்கும்

எதிர்வழி  = எதிர்த் திசையில்

பிராணக் கணிதன்  = ஆயுள் காரகனாகிய

பெருமம்  = மற்ற கோள்களை விட அதிக காலம்

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 11]

{26-12-2022}

---------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக