செவ்வாய், 23 மே, 2023

பாடல் (16) கோள்களின் காரகப்பலன்!

 

                       சூரியன்

 

தந்தை,          தலைநோவு,     தைரியம்,        மேனியெழில்,

சிந்தை          தெளிவில்லாப்   பெண்போகம் --  முந்துபுகழ்

விந்தை,         விரைத்தமுடி,    உத்யோகம்,      காரகனே

செந்தேர்         பரிதியெனச்     செப்பு !

 

                      சந்திரன்

 

அன்னை,        அணிமணிகள்,   நல்லுறக்கம்,     இன்புசிவு,

இன்னல்         உடல்மெலிவு,   என்புருக்கி   ---  உன்மத்தம்

மன்னல்         பணிவாய்ப்பு,    மல்லாட்டம்     யாவுக்கும்

கன்மதியே       காரகனாம்       காண் !

 

                      செவ்வாய்

 

உடன்பிறப்பு,     பூமி,அழல்,       உற்சாகம்,        கடுங்கோபம்,

கடன்,தடைகள்,  காயமுறல்,      அதிகாரம்    --   படைச்சேவை,

அடல்வீரம்,      செங்குருதி,      போர்,சோரம்,    விரைமரணம்,

கடவுகுசன்      காரணமாம்      காண் !

 

                        புதன்

 

கல்விநிலை,     பேரறிவு,        கற்சிற்பம்,       தாய்மாமன்,

சொல்லாடல்,    வாதநோய்,      சொற்பொழிவு  -- நல்லியல்பு,

வெல்லரிய      வாணிபமும்     சங்கீதம்,         சோதிடமும்

எல்புதனே       காரணமாம்      ஈங்கு !

 

                        குரு

 

பிள்ளைகள்,     நல்லொழுக்கம்,  பெரும்பதவி,     இல்லவளம்,

வெள்ளைக்      குருத்துவம்,     விற்பன்னம், --   உள்அமைதி,

தெள்ளியம்,      யோகநிலை,     திறப்படல்,       அரசுறவு,

ஒள்ளிகுரு       காரணமென்     றோது !

 

                       சுக்கிரன்

 

இல்லாள்,       துணையமைவு, எண்ணற்ற       பெண்தொடர்பு,

நல்லழ்கு,       இசைக்கருவி,    நாட்டமுடன்  -- பல்நடனம்,

சொல்லில்       விகடமொழி,     சூழ்கடல்        வான்செலவு,

எல்லாமே       சுக்கிரனின்      ஈவு !

 

                         சனி

 

தீர்க்காயுள்,      சீவனம்,         தண்டனை,      வாயாடல்,

ஈர்க்கும்         மதுமோகம்,     வீண்பேச்சி   --  ஏர்ப்புரவு,

ஆர்க்கும்        சிறைவாழ்வு,    அங்கம்          குறையுடைமை,

காரியனே       காரணமாம்      காண் !

 

                         இராகு

 

தந்தை          வழித்தாதை,     தாழ்தொழில்,    பலவேடம்

விந்தை         விகடவினை,    ஊனவுடல்   --   தொந்தரவு,

நிந்தை,          சிறைவாசம்,     குட்டம்,          நஞ்சுபயம்,

குந்தகன்         இராகுவெனக்    கூறு !

 

                        கேது

 

தாய்வழித்       தாதை,          விலைமகளிர்,   தீயூறு,

நோய்மலிவு,     குட்டம்,         அகங்காரம்,   --  மாய்மாலம்,

வாய்வயிறு      குத்தல்,          சிலந்தி,          சிறைபுக்கல்

காய்கேது        காரணமாம்      காண் !

 

                       காரகன்

 

சூரியன்                               பித்ரு காரகன்       (தந்தை)

சந்திரன்                              மாத்ரு காரகன்       (தாய்)

செவ்வாய்                            பிராத்ரு காரகன்      (சகோதரம்)

புதன்                                  மாதுல காரகன்      (மாமன்) 

குரு                                   புத்ர காரகன்          (புத்திரன்)

சுக்கிரன்                              களத்ர காரகன்        (வாழ்விணை)

சனி                                   ஆயுள் காரகன்        (வாழ்நாள்)

இராகு                                 பிதாமக காரகன்     (அப்பப்பா)

கேது                                   மாதாமக காரகன்    (அம்மப்பா)

 -----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]

{23-05-2023}

-----------------------------------------------------------------------------------

 


                

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக