செவ்வாய், 23 மே, 2023

பாடல் (07) கோள்களின் உச்ச வீடும் நீச்ச வீடும் !

 

 

ஒவ்வொரு          கோளும்            உச்சம்               பெறுவது

     ஓரோர்              வீட்டினிலே     -    அதை

          உரைக்கும்          வகையில்          பட்டியல்          தருவேன்

                  உண்மையை          நீயறி            வாய் !

 

செவ்வொளி        ஞாயிறு          செம்மறி           வீட்டில்

     சீர்மதி              காளையிலே    -   வதை

          செவ்வாய்           மகரச்             சீரகம்              உச்சம்

                செம்புதன்            கன்னி          யிலே  !

 

திவ்விய           நற்குரு            தேரகம்            நண்டில்

     தீவெளி            மீனமதில்       -   கரும்

         தேவ               மகன்சனி           தூதுலை          வீடதில்

             தேடினன்            உச்ச               நிலை !

 

கவ்விரு          பாம்புகள்            ராகுவும்         கேதுவும்

     காளையும்        தேளையுமே      -   மிகக்

         கச்சித             மாகவே              உச்சம்         உறைபதி

              கண்டனர்         நீயறி         வாய் !         

 

பவ்விய          மேனிலை           உச்சம           தில்வரும்

      பங்கம்          நீச்சினிலே        -    கோள்

          பதிவிடம்          உச்சம்             ஏழாம்           இடமே

                பயனறு         நீச்ச              நிலை !

-----------------------------------------------------------------------------------------

 

செவ்வொளி   = சிவந்த ஒளி

ஞாயிறு  = சூரியன்

செம்மறி வீட்டில்   = மேழத்தில்

சீர்மதி  = அழகிய சந்திரன்

காளையிலே   = ரிஷபத்திலே

வதை  = வருத்துதல்

சீரகம்  = பெருமை

செம்புதன் = அழகிய புதன்

திவ்விய = மேன்மையான

தேரகம்  = தேர்வு செய்த வீடு

நண்டினில்  = கடகத்தில்

தீவெளி  = ஒளிபெருக்கும் வானகத்திடை உள்ள

மீனமதில்  = மீனத்தில்

தூதுலை  = வலிமையான துலாம் வீட்டில்

கவ்வு  = கவரும்

காளையும்   = கடகத்தையும்

தேளையும்  = விருச்சிகத்தையும்

உச்சம் உறைபதி  = உச்ச வலிமை அடையும் வீடு

பவ்விய மேனிலை = பயன்மிகு வலிமை மிகு நிலை

பங்கம் நீச்சினிலே = வலிமையை முற்றிலுமிழந்த நிலை

ஏழாமிடமே = உச்ச வீட்டிற்கு ஏழாவது வீடு நீச்ச வீடாகும்

 --------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]

{23-05-2023}

---------------------------------------------------------------------------------------


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக